Thursday, 17 September 2009

அண்ணன், தம்பி சண்டையின் பின்னணியில்...

என்.சுரேஷ்

கிராமப்புறங்களில் உள்ள எளிய மக்கள் கிணறு தோண்டும் போது புதையல் கிடைத்தால் அது அரசுக்கு சொந்தம். அதுவே அம்பானிகளுக்கு கிடைத்தால் கரும்பு தின்ன கூலி கொடுக்கும் நமது மத்திய அரசு.

ஓஎன்ஜிசி மூலம் இந்திய எண்ணெய் வயல்களிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் விலை இந்திய உற்பத்தி செலவிற்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அம்பானிகளுக்கு, அரசு நிலத்திலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவிற்கு சர்வதேசவிலை கொடுக்க வேண்டுமாம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது முகவரி இல்லாமல் இருந்தார்கள் அம்பானிகள். இன்று, அவர்கள் குடும்பச் சண்டைக்கும் அரசு சொத்தை பங்கு போடுவதற்கும் பிரதம மந்திரி மற்றும் இலாகா மந்திரிகளும் நேரத்தை ஒதுக்குவதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.

எரிபொருள் தேவையில் 70 சதவீதம் இறக்குமதியை நம்பியே நம் நாடு உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது. அதே நேரத்தில், எரிபொருள் கண்டுபிடிப்பதற்கான அகழ்வாராய்ச்சிக்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது என்ற காரணத்தை கூறி, பாஜக அரசு இத்துறையில் தனியாரை ஈடுபடுத்தியது. காங்கிரசும் எஜமான விசுவாசத்துடன், நீயா-நானா? என்று அம்பானி களுக்கு போட்டி போட்டுக் கொண்டு; சேவை செய்து கொண்டு இருக்கிறது,

ஆந்திர மாநிலத்தில் பாயும் கிருஷ்ணா, கோதாவரி ஆற்றின் டெல்டா பகுதி மற்றும் இந்நதிகள் கலக்கின்ற வங்கக் கடலின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதியையும் சேர்த்து கிருஷ்ணா-கோதாவரி படுகை என்றழைக்கின்றனர். இப்பகுதிதான் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். பாம்பே ஹை எனப்படும் மும்பை ஆழ்கடல் எண்ணெய் வயலை காட்டிலும் பன்மடங்கு பெரிய பரப்பளவு கொண்டது. சுமார் 28,000 ச.கி.மீட்டர் நிலப்பரப்பிலும். சுமார் 21,000 ச.கி.மீட்டர் ஆழ்கடல் பகுதியில் 200 மீ. ஆழத்திலும். சுமார் 18,000 ச.கி.மீ ஆழ்கடலில் 200 மீ முதல் 300 மீ ஆழத்திலும் இப்படுகை பரந்து விரிந்துள்ளது,

நமது நாட்டின் புதிய எண்ணெய் வள அகழ்வாய்வு மற்றும் உரிமம் (என்இஎல்பி) வழங்குதல் கொள்கை அடிப்படையில், ஆங்காங்கு கண்டறியப்பட்ட 57 எண்ணெய் வயல்களை (19 ஆழ் கடல். 9 முகத்துவாரம். 29 நிலப்பரப்பு) தனியார் வசம் ஒப்படைத்து, அகழ்வாய்வு மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்ய தனியார் துறைக்கு உரிமம் வழங்கப்பட் டது. ஆர்ஐஎல் என்றழைக்கப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் சுமார் 12 பகுதி களை மேற்கண்ட முறையில் 2000ஆம் ஆண்டில் ஏலத்திற்கு எடுத்தது, என்இஎல்பி கொள்கையின்படி இத்தனியார் நிறுவனங்கள் எண்ணெய் உற்பத்தி செய்யவும்; அரசாங்கத் துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன, மேலும் இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்திலும் பங்கு பெற்றுக் கொள்ள இத்தகைய உரிமம் வகை செய்துள்ளது,

இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பிளாக் 6 எனப்படும் பகுதியை கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆர்ஐஎல் மற்றும் என்ஐகேஓ நிறுவனமும் இந்திய அரசிட மிருந்து எண்ணெய் உற்பத்தி செய்ய உரிமம் பெற்றன.

ரிலையன்ஸ் நிறுவனம். ஒன்றுபட்ட குழுமமாக செயல்பட்டுக்கொண்டிருந்த காலத் தில். 2003ம் ஆண்டு மேற்கு உத்திரப்பிரதேசத்தில் தாதர் என்ற இடத்தில். எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்ய ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட் என்ற பெயரில் மின் நிலையம் ஒன்றை நிறுவி, அதற்கு தேவையான எரிவாயுவை கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து கொண்டு செல்ல திட்டமிட்டது. ஆனால் 2005ல் இக்குழுமத்தில் பிளவு ஏற்பட்டு இதில் பங்கு பெற்ற பல்வேறு துறைகளின் நிர்வாக உரிமைகளும் அம்பானி சகோதரர்களிடையே கைமாறின. மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியிடம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையும்; இளைய சகோதரர் அனில் அம்பானி வசம் மின் உற்பத்தி நிர்வாகமும் வந்தது. ஆர்ஐஎல் பிளவுண்டு ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் எனப்படும் நிறுவனம் உருவானது.

தாதர் மின்நிலையத்திற்கு எரிவாயு சப்ளை செய்ய 2005ல் ஆர்என்ஆர்எல் மற்றும் ஆர்ஐஎல் நிறுவனத்திற்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி.ஆர்ஐஎல் நிறுவனம், என்டிபிசி எனப்படும் தேசிய அனல் மின் நிலைய திட்டத்திற்கு எந்த விலையில் எரிவாயு விற்பனை செய்யுமோ, அதே விலையில் தாதர் மின் திட்டத்திற்கும் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2003ல் என்டிபிசி நிறுவனம் எரிவாயு சப்ளைக்காக டெண்டர்கள் வரவழைத்தது, இந்த டெண்டரில் ஆர்ஐஎல் வெற்றி பெற்று, ஒரு எம்எம்பிடியு 2.34 டாலர் என்ற விலையில் எரிவாயு சப்ளை செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டது.

மேற்குறிப்பிட்ட விலை நிர்ணயம், அதாவது ஒரு யூனிட் எரிவாயு 2.34 டாலர் என்ற அடிப்படையில் ஆர்என்ஆர்எல் நிறுவனத்திற்கு விற்க முடியாது என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வாதம். இதற்கு பல காரணங்களை கூறுகிறது ஆர்ஐஎல்.

ஆர்என்ஆர்எல் நிறுவனத்தின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு பிறகும் 2.34 டாலர் என்ற அடிப்படையில் விற்க அரசாங்கம் மறுத்து விட்டது, இந்த 2.34 டாலர் என்பது சந்தை தீர்மானித்த விலையல்ல என்றும், மேலும் எரிவாயு அரசின் சொத்து. அதை இரு சகோதரர்களின் விருப்பப்படி விலை நிர்ணயம் செய்து விட முடியாது.

புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் எரிவாயு சப்ளை செய்ய ஆர்ஐஎல் மறுத்து விட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத் தை நாடியது. மும்பை நீதிமன்றம் வழக்கை விசாரித்தது.ஆர்ஐஎல் மற்றும் ஆர்என்ஆர்எல் நிறுவனத்திற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, நிறுவனத்திற்கு தேவையான எரிவாயுவை சப்ளை செய்ய தக்க ஏற்பாடு செய்ய ஆணையிட்டது. ஆர்என்ஆர்எல் நிறுவனமே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. மும்பை உயர்நீதி மன்றத்தின் ஆணையை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையிலேயே எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்றும் அதில் முறையீடு செய்துள்ளது.

முகேஷ் அம்பானியும் அனில் அம்பானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்து கிறார். தங்கள் நிறுவனத்தின் மீது தேவையற்ற, அடிப்படையற்ற, ஆதாரமற்ற, போதிய தகவல் கள் அற்ற விளம்பரத்தில் ஈடுபட்டுள்ளது என குமுறுகிறார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கமிட்டியின் மு.ஆ. சந்திரசேகர், ஆர்ஐஎல் நிறுவனத்தில் செலவினம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் என அனில் அம்பானி கூறு கிறார்.

கே.எம்.சந்திரசேகர் அவர்கள், முகேஷ் அம்பானி சேர்ந்து செயல்படும் என்ஜினீயரிங் கம்பெனி மீது சந்தேகப்படுகிறார்.

அனில் நிறுவனம், அரசாங்கம் தலையிட்டு, மத்திய அரசின் தணிக்கைக்கு உட்படுத்த உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறது.

மேலும் தணிக்கை அறிக்கையை மக்களி டையே சமர்ப்பிக்க ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறது.

முதலாளித்துவம் தோன்றும்போது, அது தன் சவக்குழியை தானே தோண்டிக் கொள் ளும் என்று மார்க்ஸ் சொன்னது நினைவிற்கு வருகிறது. இந்த பிரச்சனை சம்பந்தமாக இடதுசாரிகள், இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லி உருவாக்கிய விழிப்புணர்வைவிட முதலாளித்துவ நெருக்கடி (அம்பானி நெருக்கடி) அனில் அம்பானி, தன் சகோதரனுக்கு எதிராக (முதலாளித்துவம் முதலாளித்துவத்திற்கு எதிராக) ஏற்படுத்திய நெருக்கடி பெரிய தாகும். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து அரசின் மீது அக்கறை உள்ளது போல்; பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது.

சாதாரண மக்கள் குடும்பச் சொத்து பாகப்பிரிவினை செய்யப்படும்போது சொந்த வீட் டை விற்று பணத்தை பிரித்துச் சென்று, வாடகை வீட்டில் குடியிருக்கக்கூடிய சூழ்நிலை. ஆனால், அம்பானிகள் பிளவுபட்டு, சொத்து பிரிந்தபிறகு பணக்கார வரிசையில் ஐம்பதாவது இடத்தில் இருந்து முதலாம் இடத்திற்கு வரமுடிகிறது. இது காங்கிரசும் பாஜகவும் எந்த அளவிற்கு அம்பானிகளுக்காக உழைக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் 2005-06ல் 76.240கோடி ரூபாய் லாபமும், 2006-07ல் 81.550 கோடி ரூபாயும் அடைந்துள்ளது. பங்குத்தொகையாக 22.886 கோடி ரூபாயில் இருந்து 2006-07ல் 26.805 கோடி ரூபாயாக வழங்கியுள்ளது. சுங்க வரி, கலால் வரி, சேவை வரி, சொத்து வரி, வட்டி. கடன் என்று பல்வேறு வரிகள் மூலமாக அரசுக்கு ரூ.1,47,635 கோடி அளித்துள்ளது. கையிருப்பு மற்றும் உபரி பணமாக 2005-06ல் 3,59,181 கோடி ரூபாயும், 2006-07ல் 4,16,494 கோடி ரூபாயும் உள்ளது. இவ்வளவு அதிகமான லாபத்தையும் கையிருப்பையும் வைத்துள்ள, பொன்முட்டையிடும் பொதுத்துறை நிறுவனங்களை ஊக்கப்படுத்தாமல் தனியார் துறையை ‘தனியாக” கவனிப்பது ஏனோ?

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகுகள்.

தீக்கதிர் 17/09/2009 - வியாழன்

No comments:

Post a Comment