Thursday, 17 September 2009

“இந்த சண்டை ஓயாது, சமரசம் போரில் கிடையாது’’



“அன்று சனிக்கிழமை இல்லாதிருந்தால், ஒரு வேளை அவள் பள்ளிக்கு சென்றிருக்கலாம். இன்று உங்களைப்போல் ஒரு பட்டதாரி மாணவியாகக்கூட இருந்திருப்பாள். அன்று செல்விக்கு 13 வயது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. வனத்துறையினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, வாழ்வைத் தொலைத்து சிறைப்பட்டு, தட்டுத்தடுமாறி வர்க்கப் போராளியாக இன்று உங்கள் முன் நிற்கிறாள்’’ என்று வாச்சாத்தி எனும் மலைவாழ் மக்கள் கிராமத்திலிருந்து வந்திருந்த அந்தப் பெண்ணை மாணவிகள் முன்னே அறிமுகப்படுத்துகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம். ஏறத்தாழ தம்மைவிட சில வயதே மூத்த அந்தப் போராளியை சேலத்தில் நடைபெற்ற மாணவியர் மாநில மாநாட்டுப் பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாய் எழுந்து நின்று அரங்கம் அதிர கைதட்டி வரவேற்கின்றனர்.

“1992 ஜூன் மாதம் 20ம் தேதி அது. தோட்டத்துல இருந்த எங்கள பாரஸ்ட்டுக்காரங்க லாரியில அள்ளிட்டுப் போனாங்க... தனித்தனியா இழுத்துட்டுப்போயி மறவுலவச்சி 18 பேரையும்......... (பேச முடியவில்லை அழுகிறார், பேசமுயற்சித்தார், நாக்கு குழறியது. அரங்கம் கூட சேர்ந்தழுதது) வேணா........ யாருக்கும் இப்படி ஒரு கொடுமை வேணா........ 17 வருஷமாச்சு, கேசு நடந்துட்டே இருக்கு, கம்னூஸ்டுக்காரங்க பார்த்துக்குவாங்க, என்.எஸ். தலைவரு பார்த்துக்கிருவாரு’’ விடாது தனது நெஞ்சை அழுத்திப் பிழியும் அந்த அக்கிரமத்தை நினைவிலிருந்து அகற்ற முடியாத துயரத்தோடு சென்றமர்ந்தார்.

சண்முகம் தொடர்ந்தார். விவசாய கிணறுகளை இடித்துத்தள்ளி, பம்பு செட்டுகளை நாசம் செய்து சொட்டுத் தண்ணீரோ உண்ண ஒரு பருக்கையோ மிஞ்சிடக் கூடாது என்று துவம்சம் செய்தார்கள். கோழி, ஆடுகளை அடித்துத் தின்றார்கள். வன்புணர்ச்சியில் 18 பெண்கள் சர்வ நாசம் செய்யப்பட்டார்கள். படையெடுப்பின் போது கூட இப்படி ஒரு வன்முறை அரங்கேறுமா எனத் தெரியாது. ஆளும் வர்க்கத்தின் போலீசும், வனத்துறையும் சேர்ந்து நடத்திய வன்முறை வெறியாட்டம் அது. சந்தனக்கட்டை கடத்தினார்களாம். அப்படியே இருந்தாலும் சட்டமில்லையா? அரூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள அந்த கிராமத்தில் நடந்த கொடூரம் 26 நாட்களாக வெளி உலகமே அறியாமல் மறைக்கப்பட்டது. வாச்சாத்தியின் கொடுமையை அறிந்தவர்களுக்கு வன்முறை என்றால் அதற்கு வரையறை இல்லை, இலக்கணம் ஏதுமில்லை என்பது தெரியும். காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை என மூன்று துறையும் மூன்று நாள் தங்கி மொத்த ஊரையும் அழித்துவிட்டு வெளியேறினர்.

“பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இப்படி ஒரு செயலை செய்திருக்க மாட்டார்கள்’’ என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார் ஒரு பெண் நீதிபதி. 1968-ல் கீழ வெண்மணியில் 44 உயிர்கள் கொளுத்தப்பட்ட போதும் இப்படித்தான் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நான் நீதி கேட்டு தொடர் உண்ணாவிரதம் இருந்தேன். ஐந்தாவது நாள் அரசு என்னை கைது செய்தது. உச்சநீதி மன்றமே தலையிட்டு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் அடையாள அணி வகுப்புக்கு உத்தரவிட்டது. நாங்கள் பாதிக்கப்பட்ட 18 பெண்கள் உள்ளிட்டு 22 பேர். வனத்துறை காவலர்களுக்கு (குற்றவாளிகள்) ஆதரவாக 2500 பேர் திரண்டனர். நீதிபதி சொன்னார். “மீண்டும் என் கண் முன்னாள் அப்படி ஒரு கொடுமை நடந்து விடக்கூடாது சென்று விடுங்கள்.’’ 152 வனத்துறையினர், 108 காவல்துறையினர்,9 வருவாய்த்துறையினர் மொத்தம் 269 பேர் குற்றவாளிகள், 2000 பக்க குற்றப்பத்திரிகை 17 ஆண்டுகளாக வழக்கு நடக்கிறது. இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லை.

நிறைமாத கர்ப்பிணியான இந்திராணியையும் உச்சி மலையில் ஏறி சந்தனக்கட்டை கடத்தினார் என்று சிறையில் தள்ளினர். சிறையிலே பிறந்த அவரது குழந்தைக்கு ஜெயில் ராணி என்று பெயர் வைத்தாராம். ஒரு வாரத்தில் குழந்தை இறந்தது, இரண்டு மாதத்தில் இந்திராணியும் இறந்து விட்டார். இதோ இந்த வீரத்தாய் தோழர் பரந்தாயியை முழு நிர்வாணமாக்கினர், கைகால்களைக் கட்டி அடித்து நொறுக்கினர். அத்துனையும் கடந்து இன்று இவர் மலை வாழ் மக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார். (தோழர் பரந்தாயி எழுந்து முஷ்டியை உயர்த்துகிறார்.)

விம்மி வரும் அழுகையும், பொங்கும் ஆவேசமுமாய் அந்தக் கொடுமையை தோழர் பெ.சண்முகம் விவரிக்க ஒட்டுமொத்த கூட்டமும் உறைந்து போனது. “சந்தனக்கட்டை, கடத்தியிருந்தால் அதே ஓலக்குடிசையில் ஏன் காலம் தள்ள வேண்டும்? அதிகார வர்க்கமும், ஆளும் கட்சியினரும், அரசியல் ரவுடிகளும் தான் கடத்தல் பேர்வழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். அதுவும் வனத்துறையின் கண்ணசைவின்றி எவனும் சந்தனக் கட்டைகள் கடத்த முடியாது. தங்களுக்கு விருப்பமான வழக்கென்றால் ஞாயிற்றுக்கிழமை கூட நீதிமன்றம் நடக்கும். ஏன் இந்த வழக்கில் இவ்வளவுதாமதம்?

தனது கேள்விகளால், சத்திய ஆவேசத்தால் அரங்கை அதிரவைத்து சண்முகம் உரையை முடிக்க, யுவதிகள் ஆர்ப்பரித்து எழுந்தனர் “இந்த சண்டை ஓயாது, சமரசம் போரில் கிடையாது’’, ஆவேச முழக்கங்களால் அரங்கை நிறைத்தனர். அரங்கம் அமைதி பெற வெகு நேரமானது.

அடுத்து, நாடும் ஏடுமறிந்த கல்வியாளர் முன்னாள் துணைவேந்தர் வே. வசந்தி தேவி வந்தார். ’’ நான் பேச வந்தது மறந்து விட்டது, நமது யுத்தம் எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து விட்டீர்கள், இந்த வீரப்பெண்மணிகளுக்கு இத்துணை கொடூரங்களையும் எதிர்த்துப் போராடும் சக்தி எங்கிருந்து வந்தது! சமுதாயத்தின் கண்முன்னே திரை போட்டு மூடி மறைக்கப்பட்ட கொடுமை இது. இந்த வீரம் வெல்லட்டும்.’’ என்று வாயார மனதார வாழ்த்தினார்.

வாச்சாத்தி கொடூரம் அரங்கேறிய போது தங்களுக்கு ஐந்தோ, பத்தோ வயதிருக்கும். ஆனாலும் மறைக்கப்பட்ட சம்பவங்கள், வரலாறுகள் மனதில் அழுத்த தங்கள் எதிரி யார் என்று அறிந்துவிட்டதால் இனி இலக்கு சுலபமானதே என்பதை அந்த யுவதிகள் உணர்ந்து தெளிந்தனர் என்றால் அது மிகையில்லை.

தீக்கதிர் 15/09/2009 - செவ்வாய்

No comments:

Post a Comment