Thursday, 19 November 2009

இந்திய ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல்

கி.இலக்குவன்

தேர்தல்களில் பணம் விளையாடுவது என்பது இப்போது திடீரென்று தோன்றிய நிகழ்வு அல்ல. இந்திய நாட்டின் ஜனநாயகத் தேர்தல்கள் நடைபெறத் துவங்கிய காலத்திலி ருந்தே இது நிகழ்ந்துவரும் ஒன்றுதான். ஆனால் முந்தைய காலங்களில் சட்டமன்றத் தொகுதிகளின் சில பகுதிகளில் சிறிய அள வில் மட்டும் ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெற்று வந்தன. ஒரு குறிப்பிட்ட நாட் டாண்மைக்காரரை சரிப்படுத்திவிட்டால், சில நூறு வாக்குகளை வாங்க முடியும் என் றால் அந்த இடங்களில் சில ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்படும். ஆனால் பல்வேறு தேர் தல்களின்போது ஆளுங்கட்சி ஒன்றை தோற்கடிப்பது என்று மக்கள் முடிவு செய்து விட்டால் அந்த கட்சி எவ்வளவு பணத்தை வாரி இறைத்தாலும் வெற்றிபெற முடியாது என்ற நிலை இருந்து வந்தது. இந்த வகை யில் மக்களின் உணர்வுகள் பல ஆட்சி மாற் றங்களுக்கு வழிவகுத்த அனுபவங்களை நாடு சந்தித்தது.

செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகத் துறை முழுமையான நடுநிலையுடன் என்றுமே செயல்பட்டதாகக் கூறமுடியாது. அவற்றுக் கேயான அரசியல் சார்பு இருந்து வந்துள்ளது. ஆனால் அவையும் களச்சூழலை ஓரளவுக்கு பிரதிபலித்து வந்தன. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் சம அளவில் இல்லையென்றாலும் இருட் டடிப்புச் செய்யாமல் வெளியிட்டு வந்தன. அவை அனைத்தும் கடந்த பத்தாண்டுகளில் தலைகீழாக மாறிப்போய்விட்டன.

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டின் திருமங் கலத்தில் நடைபெற்ற தேர்தல், பணபல விளையாட்டின் உச்சகட்டமாகத் திகழ்ந்த வெளிப்படையான பணவிநியோகம், பிரி யாணி விருந்துகள், பரிசுப்பொருட்களை வழங்குதல் போன்றவை விரிவான அளவில் நடைபெற்றன. திருமங்கல பாணி தேர்தல் முறை என்று அகில இந்திய ஊடகங்கள் குறிப்பிடும் அளவுக்கு அவக்கேடானவை யாக அவை இருந்தன.

இந்திய நாட்டுப் பத்திரிகை உலகமும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வேட்பாளர் கள் மற்றும் கட்சிப் பிரச்சாரம் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கே கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதைப் புகழ்பெற்ற பத்திரிகையாளரான பி.சாய்நாத், ‘இந்து’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் (26.10.2009) ஏராளமான விபரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

கைபேசி நிறுவனங்கள் உள்ளூர் அழைப் புகளுக்கு இவ்வளவு கட்டணம், வெளியூர் அழைப்புகளுக்கு இவ்வளவு கட்டணம் என் றெல்லாம் பல்வேறு கட்டண விகிதத் திட்டங் களை அறிவிப்பதைப்போல, மகாராஷ்டிரா மற் றும் ஆந்திர மாநிலப் பத்திரிகைகளும் தேர் தல் செய்திகளை வெளியிடுவதற்கு கட்ட ணங்களை நிர்ணயம் செய்திருந்தன. ஒரு வேட்பாளரை பற்றி எந்தவொரு செய்தி வர வேண்டுமென்றாலும் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. பணம் கிடையாது என்றால் செய்தியும் கிடையாது என்ற விதியே நடைமுறையாயிற்று. வசதி குறைவான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் தொடர்பான செய்திகள் இருட்ட டிப்பு செய்யப்பட்டன. இந்த சிறிய கட்சிக ளால் எழுப்பப்பட்ட உண்மையான பிரச்ச னைகள் வாக்காளர்களுக்கு தெரியாத வண் ணம் மறைக்கப்பட்டன. மக்களவைத் தேர் தல்களின்போது சிறிய அளவிலான செய்தி களை வெளியிடுவதற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதும், பெரிய அளவிலான செய்திகளை வெளியிடு வதற்கு பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப் பட்டது குறித்தும் (2009 ஏப்ரல் 7ம் தேதி) ‘தி இந்து’ செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் இது பலமடங்கு அதிகரித்துள்ளதை காண முடிந்தது.

சாய்நாத் கூறுகிறார் (தி இந்து, 26.10.09)

“பேரங்கள் பலவாகவும் விதவிதமாகவும் இருந்தன. வாழ்க்கைக்குறிப்புகள், பேட்டிகள், சாதனைப் பட்டியல், எதிரணி வேட்பாளரைத் தாக்கி எழுதுவது போன்ற ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான கட்டணங்கள் விதிக்கப்பட்டி ருந்தன. (தொலைக்காட்சி சேனல்களைப் பொருத்தவரை ‘நேரடி ஒளிபரப்புகள்’ ‘சிறப் புக்காட்சிகள்’, ஒருநாளில் பல மணிநேரங் கள் வேட்பாளர் பின்னாலேயே சென்று செய்தி களை அளித்தல் போன்றவற்றுக்கு தனித் தனியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டி ருந்தன.) எதிரணி வேட்பாளருக்கு எதிரான வசவுகள், ஒருபுறமிருக்க, கட்டண விகித ஏற் பாட்டின்படி ஒரு வேட்பாளருக்கு எதிரான குற்றப்பதிவுகள் வாக்காளர்களுக்கு தெரிவிக் கப்படாமல் இருப்பதும் உறுதி செய்யப்படு கிறது. சிலரது சாதனைகளைப் போற்றிப்புக ழும் செய்திகளை வெளியிடும்போது, அவர் களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற நடவடிக் கைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.”

தமிழ்நாட்டு செய்தித் தாள்களும் ஊடகங் களும் எந்த அளவுக்குக் கட்டண வசூலில் ஈடுபட்டன என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. ஆனால் ஐயப் பாடுகளை ஏற்படுத்திய சில செய்திகளைப் பற்றிக் குறிப்பிடமுடியும். மதுரை நாடாளு மன்ற உறுப்பினராக இரண்டு முறை செயல் பட்ட தோழர் பொ.மோகன், தொகுதி மக்களுக் காக ஆற்றிய சாதனைகள் பலரால் இன்றும் புகழப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் எந்த சாதனையையும் நிகழ்த்தவில்லை. மக்கள் மத்தியில் அவரைப்பற்றி பெரும் அதிருப்தி நிலவுகிறது என்பது போன்ற செய்திகள், சில நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் மக்கள வைத் தேர்தலின்போது வெளியிடப்பட்டன. அதேபோல மோகனின் சார்பாளர்கள் வாக்கா ளர்களுக்குப் பணம் கொடுத்தபோது கையும் களவுமாக பிடிபட்டதாக அவதூறுச் செய்தி கள் பரப்பப்பட்டன. இவை மார்க்சிஸ்ட் கட்சி யின் பால் உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரண மாக வெளியிடப்பட்டனவா அல்லது பணத் தின் விளையாட்டு அதன் பின்னணியாக இருந் ததா என்பது பரிசீலிக்கப்படவேண்டிய விஷயம்.

“மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர் தல்களின்போது சில பத்திரிகைகள் சில வேட்பாளர்களுக்காக சிறப்பு இணைப்பு களையும் வெளியிட்டன. மாநிலத்தின் மிக முக்கியமான அந்த வேட்பாளர் அளித்த கட் டணம் ரூ. 1.5 கோடியாகும்.”

2004ம் ஆண்டு தேர்தலின்போது ஒரு வேட்பாளரின் சொத்துவிபரத்தையும் 2009ம் ஆண்டு தேர்தலின்போது அவர் அளித்துள்ள சொத்து விபரங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால், இடைப்பட்ட காலத்தில் அவர் ஈட்டிய வரு மானத்தின் அளவை மதிப்பிட்டுவிட முடியும்.

மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவி வகித்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் சொத்து, 2004க்கும் 2009க்கும்இடைப்பட்ட காலத் தில் ரூ.2 கோடியே 70 லட்சம் அளவுக்கு அதி கரித்துள்ளது. அதாவது சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.55 லட்சம் அதிகரித்துள்ளது.

சுரேஷ் ஜெயின் என்ற சட்டமன்ற உறுப் பினரின் சொத்து 2004ல் 26 கோடி ரூபாயாக இருந்தது. இது 2009ல் 79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சரா சரியாக மாதத்துக்கு 80 லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பி னர்களானவர்களில் 108 கோடீசுவரர்கள் இருந்தனர் என்றால், 2009 தேர்தலில் மொத்த முள்ள 288 சட்டமன்ற உறுப்பினர்களில் 184 பேர் கோடீசுவரர்கள்.

பி.சாய்நாத் அளித்துள்ள ஏராளமான விப ரங்களிலிருந்து சிலவற்றை மட்டுமே உதா ரணங்களாக அளித்துள்ளோம். சமீப ஆண்டு களின் சட்டமன்றத் தேர்தல்களும், நாடாளு மன்றத் தேர்தல்களும் கோடீசுவரர்கள் மட் டுமே புகுந்து விளையாடக்கூடிய களங்க ளாக மாறியுள்ளன. இது இந்திய ஜனநாயகத் துக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. தேர்தல் ஆணையம் மிகவும் கடுமையான விதிகளை கறாராக அமல்படுத்தி வருவது போன்ற தோற்றம் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவருவது உண்மையே. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள ஓட்டுப் போடுவது, போன்றவற்றுக்கு எதிரான சில நடவடிக்கைகளை அது எடுத்து வந்துள்ளது என்பது உண்மையே. ஆனால் வாக்காளர்க ளுக்கு பண விநியோகம், செய்தித்தாள்களை யும் ஊடகங்களையும் விலைக்கு வாங்குவது போன்ற முறைகேடுகளுக்கு எதிராக எத்த கைய உருப்படியான நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் இதுவரை எடுக்கவில்லை. சுவரெழுத்து பிரச்சாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தேர் தல் ஆணையம், பிரியாணி விருந்துகளை தடுத்து நிறுத்துவதற்கு எத்தகைய நட வடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இத்தகைய முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் பெரும் அளவிலான தேர்தல் சீர்திருத்தங்கள் அவசர அவசிய தேவையாக மாறியுள்ளன. தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு பதிலாக கட்சிகள் போட் டியிடக்கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை, ஊடகங்களின் மூலம் நடைபெற வேண்டிய பிரச்சாரத்துக்கான செலவுகளை அரசே ஏற்பது போன்ற தேர்தல் சீர்திருத்த ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் ஜனநாயகம் ஒரு கேலிக் கூத்தாக மாறாமலிருக்க வேண்டுமானால், தேர்தல் சீர்திருத்தங்கள் அவசர அவசிய தேவையாக மாறியுள்ளன. இந்திய நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், இவை குறித்து சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டும்.

- தீக்கதிர்